மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய வாலிபர்


மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய வாலிபர்
x

தூசி அருகே ரத்த காயத்துடன் மர்மமான முறையில் தூக்கில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

தூசி

தூசி அருகே ரத்த காயத்துடன் மர்மமான முறையில் தூக்கில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மகன் செல்வராஜ் (வயது 24). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு காவலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

செல்வராஜ் நேற்று மாலை வேலை முடிந்ததும் மாமியார் வீட்டில் இருந்த மனைவி பிரதீபாவை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு கனிகிலுப்பை கிராமத்துக்கு வந்தார்.

தகராறு ஏற்பட்டதா?

ெசல்வராஜ் இரவு 8 மணியளவில் வெளியில் செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இரவு 10 மணியளவில் செல்வராஜின் நண்பரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவருமான மோகன் என்பவர், பிரதீபாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

செல்வராஜுக்கும், உனக்கும் (மனைவி பிரதீபா) தகராறு ஏற்பட்டதா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை என்று தெரிவித்துள்ளார். நானும், செல்வராஜும் ஒன்றாக தான் மது குடித்துக் கொண்டிருக்கிறோம். நானே சிறிது நேரத்தில் செல்வராஜை அழைத்து வந்து வீட்டில் விடுகிறேன் எனக்கூறி செல்போனை துண்டித்து விட்டார்.

கத்தியோடு துரத்துகிறார்கள்

இதையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், பிரதீபாவின் ெசல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசுகையில், உங்கள் கணவர் செல்வராஜ் எனக்கு போன் செய்து, என்னை மர்ம நபர்கள் 2 பேர் கத்தியோடு துரத்துகிறார்கள், என்னை வந்து காப்பாற்றுங்கள், எனத் தெரிவித்ததாக பிரதீபாவிடம் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீபா உடனே தூசி போலீசுக்கு ேநற்று முன்தினம் இரவு 10 மணியளவில் போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும், பிரதீபாவின் உறவினர்களும் கனிகிலுப்பை கிராமத்துக்கு வந்து பல்வேறு இடங்களில் செல்வராஜை தேடினர்.

ரத்த காயத்துடன் தூக்கில் தொங்கினார்

அப்போது இரவு 12 மணியளவில் கனிகிலுப்பை கிராம சுடுகாடுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் ெசல்வராஜ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அவரின் கை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. செல்வராஜின் பிணத்தை பார்த்து பிரதீபா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து பிரதீபா தூசி போலீசில், தனது கணவர் செல்வராஜின் சாவில் சந்தேகம் இருப்பதாக, புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய செல்வராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக் கொலை?

மேலும் தூசி போலீசார், மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராஜை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கனிகிலுப்பை கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story