பெண்ணின் கையை பிடித்து இழுத்த வாலிபர்


பெண்ணின் கையை பிடித்து இழுத்த வாலிபர்
x

வாணியம்பாடியில் குப்பை அள்ளுவது போல் நடித்து, வீட்டில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த வாலிபரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர்

துப்புரவு பணியாளர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சி.என்.ஏ. ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 27). வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் தொடர்ந்து மது போதைக்கு அடிமையானதால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால் நகராட்சியில் தொடர்ந்து வேலை செய்வது போன்று நடித்து, பல்வேறு இடங்களில் தெருக்களில் குப்பை அள்ளுவது போல் ஆங்காங்கே வீடுகளில் உள்ள பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தர்ம அடி

இந்த நிலையில் வழக்கம் போல நேற்று வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் குப்பை அள்ளுவது போல் சென்று அங்கு வீட்டில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மோகனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story