முதல் திருமணத்தை மறைத்து இளம் பெண்ணை திருமணம் செய்த வாலிபர்
ஆற்காட்டில் முகநூல் மூலம் பழகி முதல் திருமணத்தை மறைத்து, இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆற்காட்டில் முகநூல் மூலம் பழகி முதல் திருமணத்தை மறைத்து, இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏமாற்றி திருமணம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு புதுத் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் இவருக்கும் ஆற்காடு ஜெகநாதன் தெருவை சேர்ந்த அனுப்பிரியா (21) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பழகி வந்துள்ளனர்.
கணேஷ் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அனுப்பிரியாவுடன் பழகி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி அனுபிரியாவை அழைத்துக் கொண்டு கணேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சென்று திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்துள்ளார். அனுபிரியாவை காணவில்லை என அவரது அம்மா கீதா ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசில் ஒப்படைப்பு
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து அனுப்பிரியாவை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் அனுபிரியா தனது தாய்க்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். அப்போது கணேசை, அனுப்பிரியா திருமணம்செய்துள்ளதை அறிந்த அவரது தாய் நீ திருமணம் செய்துள்ள கணேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுப்பிரியா எதுவும் தெரியாதது போல் நடித்து கணேசை ஆற்காட்டிற்கு அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் பிடித்து கொடுத்துள்ளார். மேலும் கணேஷ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் 15 பவுன் நகையை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கணேஷ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.