எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரை மனுவாக கொடுத்த இளைஞர்கள்


எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரை மனுவாக கொடுத்த இளைஞர்கள்
x

கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரை மனுவாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரை மனுவாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, துணைத்தலைவர் ஆர்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து 4 மாதங்களாகிறது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கும் போது, அதுகுறித்த முழு விவரம் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை என்று ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.சக்திவேல் புகார் தெரிவித்தார்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கீழ்சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பட்டு அண்ணா நகர் இளைஞர்கள் சிலர் உள்ளே வந்து எதுவும் எழுதப்படாத வெள்ளை பேப்பரை மனுவாக வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தியிடம் வழங்கினர்.

பரபரப்பு

அப்போது அவர்கள், மாம்பட்டு அண்ணா நகரில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேஷன் கடை கட்டிடம், துணை சுகாதார நிலைய கட்டிடம் ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், மனு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும், இப்போது எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரை நாங்கள் மனுவாக அளிக்கிறோம் என்றனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story