பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் மயங்கி விழுந்து இளம்பெண் சாவு பல் வலிக்கு அலுமினியம் பாஸ்பேட்டை வைத்ததால் பரிதாபம்
பண்ருட்டி அருகே பல் வலிக்கு அலுமினியம் பாஸ்பேட்டை வைத்ததால் முந்திரி தொழிற்சாலையில் மயங்கி விழுந்து இளம்பெண் இறந்தார்.
பண்ருட்டி,
பல் வலியால் அவதி
பண்ருட்டி அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி தனலட்சுமி (வயது 35). இவர் காடாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் பார்சல் பிரிவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பல் வலியால் அவர் அவதிப்பட்டார்.
வழக்கம்போல் வேலைக்கு சென்ற தனலட்சுமிக்கு பல் வலி அதிகமானது. எனவே தொழிற்சாலையில் முந்திரியை பதப்படுத்தி வைக்கப்படும் அட்டை பெட்டிக்கு பூச்சிகள் வராமல் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் அனுமினியம் பாஸ்பேட்டை எடுத்து தனலட்சுமி தனது வலி ஏற்பட்ட பல்லில் வைத்தார்.
மயங்கி விழுந்து சாவு
அடுத்த சில நிமிடங்களில் தனலட்சுமி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.