பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்த இளம்பெண்ணால் பரபரப்பு
பெட்ரோல் கேனுடன் இளம்பெண் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி விஸ்வநத்தம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 21). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மோதிலால் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாண்டீஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் நிர்வாகத்திடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்ைல என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு தனது காதல் கணவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளம்பெண் பாண்டீஸ்வரியிடம் இருந்து பெட்ரோல் கேனை கைப்பற்றியதுடன் அவரை விசாரணைக்காக சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.