மண்எண்ணெய் கேனுடன் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து கூட்ட அரங்கு வரை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைவரையும் சோதனை செய்த பின்னரே கூட்ட அரங்குக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் 2 குழந்தைகளுடன் கையில் பையுடன் வந்த இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவு வாயில் அருகே அவரை நிறுத்திய போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது. உடனடியாக அதனை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி (வயது 32) என்பதும், அவருடைய கணவரை அடித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.