சிறுவனை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்த வாலிபர்கள்


சிறுவனை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்த வாலிபர்கள்
x

செய்யாறு அருகே சிறுவனை வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு அருகே சிறுவனை வலுக்கட்டாயமாக மதுகுடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவனை மதுகுடிக்க வைத்த கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் விளையாடி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் சோதியம்பாக்கம் ஏரிக்கரையில் சிறுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பிரவீன் (வயது 20) தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அந்த வழியாக சென்ற மாணவனை கட்டாயப்படுத்தி தாங்கள் அருந்தி கொண்டிருந்த மதுவினை குடிக்க செய்துள்ளனர். இதனால் மாணவன் சுய நினைவு இன்றி ஏரிக்கரையில் இருந்துள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மாணவனின் பெற்றோர் அங்கு சென்று மகனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

கல்லூரி மாணவர் கைது

பின்னர் மாணவனின் பெற்றோர், மகனிடம் விசாரித்ததில் சிலா் வலுகட்டாயமாக மது கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவனின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இதில் தொடர்புடைய 3 வாலிபர்களை போலீசாா் தேடி வருகின்றனர். கைதான பிரவீன் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story