கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் திடீர் மாயம்
மங்கலம் அருகே மர்மமான முறையில் காணாமல் போன கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மங்கலம்
மங்கலம் அருகே மர்மமான முறையில் காணாமல் போன கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரத்த தடயங்கள்
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இன்று அதிகாலை ஏரிக்கு செல்லும் வழியில் சாலையோரம் இருந்த வைக்கோல் போர் எரிந்து கொண்டு இருந்தது.
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வைக்கோல் போருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் விபத்து ஏற்பட்டு போன்ற நிலையில் சாவியுடன் கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது.
அதன் அருகில் ஒரு செல்போனும் இருந்தது. அதுமட்டுமின்றி அந்த இடத்தில் உறைந்த நிலையில் ரத்த தடயங்களும் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கில் தொடர்புடையவர்
விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் திருவண்ணாமலை அருகில் உள்ள பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 33) என்பவருடையது என தெரியவந்தது.
இவர் மீது கொலை வழக்கு ஒன்று உள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காணாமல் போன மணிகண்டன் நிலை குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பினர் அவரை கடத்தி சென்று இருக்கலாம் என்று கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன மணிகண்டனுக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது.
இதனால் மங்கலம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.