வாலிபர் மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்


வாலிபர் மீண்டும் திகார் சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடந்த கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாலிபர் மீண்டும் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாலிபர் மீண்டும் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

குத்திக்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (வயது 35). இவரும், இவருடைய உறவினரான செய்யது அலி என்பவரும் கம்பளி வியாபாரம் செய்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு குமரி மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து கம்பளி விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று செய்யது அலி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாசிம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே டெல்லியில் அரங்கேறிய 4 கொலை வழக்குகள் தொடர்பாக வாசிம்மை டெல்லி போலீசார் கைது செய்து, திகார் ஜெயிலில் அடைத்தனர். வாசிம், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் கோட்டார் போலீசுக்கு தெரியவந்தது.

வழக்கு விசாரணை

எனவே, செய்யதுஅலி கொலை வழக்கு தொடர்பாக அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி சென்று வாசிம்மை கைது செய்தனர். எனினும் வாசிம் மீது ஏற்கனவே 4 கொலை வழக்குகள் இருந்ததால் அவரை தொடர்ந்து திகார் சிறையிலேயே அடைத்து வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக வாசிம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படவில்லை.

இந்த நிலையில் செய்யது அலி கொலை வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக வாசிம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திகார் சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

திகார் சிறை

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது வாசிமை விடுதலை செய்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாசிம் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செய்யது அலி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாசிம் இன்று (புதன்கிழமை) டெல்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story