விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
திருவோணம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:
திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி வடபாதி ஆவனாண்டி கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது33). விவசாயி. இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் பாண்டீஸ்வரன் (31) என்பவரின் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறின் போது திருப்பதியை பாண்டீஸ்வரன் மற்றும் அவரது தம்பி ராஜபாண்டி, தந்தை தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த திருப்பதியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராஜபாண்டி, தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.