விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
தேவதானப்பட்டி அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்தவர் வெற்றி செல்வம் (வயது 27). இவரது மனைவி அனுசுயா. இவர், பிரசவத்துக்காக ஆண்டிப்பட்டி அருகே பெருமாள் கோவில்பட்டியில் உள்ள தனது சித்தப்பா தாட்டியன் (40) என்பவர் வீட்டிற்கு வந்தார். குழந்தை பிறந்து 2 மாதம் ஆகியும் அனுசுயாவை, கணவர் வீட்டிற்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதலக்கம்பட்டி உள்ள டீக்கடையில் தாட்டியன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெற்றிசெல்வம், அவரது தந்தை காசிமாயன் ஆகியோர் தாட்டியனை விறகு கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதில் வெற்றி செல்வத்தை கைது செய்தனர். தாட்டியன் விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.