வடமாநில தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
வடமாநில தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியை சேர்ந்தவர் சாகர் டுடு (வயது 47). இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அங்கு வேலை செய்த வாலிபர் ஒருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஒரு இரும்பு தகட்டை எடுத்து சாகர் டுடுவின் வயிற்றில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த சாகர்டுடுவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரி இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த முருகேசனின் மகன் மணிகண்டன் (27) என்பவர் சாகர் டுடு வேலை செய்த அதே மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மணிகண்டனின் செல்போன் மாயமானது. இதனால் அங்கு வேலை செய்த வடமாநிலத்தவர்களிடம் அவர் சோதனை நடத்தினார். இதில் மணிகண்டனுக்கும், வடமாநிலத்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சாகர் டுடுவை இரும்பு தகட்டால் குத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்