பெண் தர மறுத்ததால் கள்ளக்காதலியின் தாயை தீர்த்துக்கட்டிய வாலிபர் கைது
பழனி அருகே பெண் தூய்மை பணியாளர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். பெண் தர மறுத்ததால், கள்ளக்காதலியின் தாயை தீர்த்து கட்டியது தெரியவந்தது.
தூய்மை பணியாளர் கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 45). தூய்மை பணியாளர். கடந்த மாதம் 19-ந்தேதி இவர், பெத்தநாயக்கன்பட்டி அருகே காட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த கொலை வழக்கில் போலீசாருக்கு துப்பு துலங்காமல் மர்மம் நீடித்து வந்தது. இந்தநிலையில் அன்னம்மாளின் மகள் புவனேஸ்வரி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரது செல்போனில் யார்?, யார்? பேசி உள்ளனர் என்பதை ஆய்வு செய்தனர். இதில், அவர் புதுஆயக்குடியை சேர்ந்த கனகராஜ் (32) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.
பெண் கேட்டு...
விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, புவனேஸ்வரியை திருமணம் செய்ய பெண் கேட்டதற்கு, அன்னம்மாள் மறுத்ததால் அவரை கனகராஜ் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புவனேஸ்வரிக்கு (27) திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து அன்னம்மாளுடன் வசித்து வருகிறார். இதேபோல் கனகராஜூவுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்த கனகராஜூடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
காட்டுக்குள் வாக்குவாதம்
இதற்கிடையே கனகராஜ்-புவனேஸ்வரி இடையேயான கள்ளக்காதல் விவகாரம் அன்னம்மாளுக்கு தெரியவந்தது. அப்போது அவர், அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். ஆனால் கனகராஜ், புவனேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் கேட்டு வந்தார்.
அதற்கு அன்னம்மாள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த அன்னம்மாளை கொலை செய்ய கனகராஜ்-புவனேஸ்வரி இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி சம்பவத்தன்று அன்னம்மாள் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் பழைய பொருட்களை சேகரிக்க சென்றார். இதையடுத்து புவனேஸ்வரி, காதலன் கனகராஜூவுக்கு செல்போனில் பேசி, தனது தாய் தனியாக இருப்பதாகவும், அவரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்குமாறு கூறினார்.
உடனே கனகராஜ், சம்பவ இடத்துக்கு சென்று அன்னம்மாளிடம் புவனேஸ்வரியை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்லால் தாக்கி கொலை
அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ், அன்னம்மாளை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் தன் மீது யாருக்கும் சந்தேகம் வராதபடி அன்னம்மாளின் இறுதி சடங்கில் அவர் கலந்துகொண்டார்.
இதேபோல் புவனேஸ்வரியும் கொலை பற்றி யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கனகராஜ் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு உடந்தையாக புவனேஸ்வரி இருந்துள்ளார்.
இவ்வாறு போலீஸ் கூறினர்.
இதையடுத்து நேற்று கனகராஜ், புவனேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று நெய்க்காரப்பட்டியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
பின்னர் கைதான கனகராஜ், புவனேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை செய்தார். அப்போது துணை சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.