மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

தக்கலை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் சில்வான்ஸ். இவருடைய மகன் பிரின்சிலி (வயது 24). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி படித்து வருகிறார். இதற்காக பிரின்சிலி தினமும் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் பிரின்சிலி வழக்கம்போல் மார்த்தாண்டத்தில் உள்ள அந்த கம்ப்யூட்டர் மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் படிக்க சென்றார். பின்னர், மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நிறுத்தி விட்டு கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி முடித்துவிட்டு வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

பொதுமக்கள் பிடித்தனர்

இதற்கிடையே மார்த்தாண்டம் மெயின் ரோடு வழியாக ஒரு வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் சென்றபோது, அந்த பகுதியில் நின்றவர்களுக்கு அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உடனே, அந்த பகுதியில் நின்றவர்கள் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, உருட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடியது என்பது தெரிந்தது. உடனே வாலிபரை மடக்கி பிடித்து இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

வாலிபர் கைது

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் வாலிபரை பிடித்து போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் அருமனை அருகே உள்ள மருதம்பாறையை சேர்ந்த ரூபன் (31) என்பதும், திருடி வந்த மோட்டார் சைக்கிள் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரின்சிலி என்பவருடையது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார், ரூபன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story