நகைக் கடையில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது


நகைக் கடையில் கொள்ளையடித்த  வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது
x

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் நைட்டி அணிந்து நகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

திருப்பூர்

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் நைட்டி அணிந்து நகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைக்கடையில் கொள்ளை

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 45). இவர் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் எதிரே ஸ்ரீ ராஜேஸ்வரி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி அன்று இரவு இவருடைய நகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்து 6 பவுன் நகைகளையும், 6 கிலோ வெள்ளி பொருட்களையும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் ஜெயச்சந்திரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 கொள்ளையர்கள் பெண்கள் அணியும் நைட்டி அணிந்து வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதே போல் கடந்த ஆகஸ்டு மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரவாரி கிராமத்தில் உள்ள ஒரு நகைக்கடையை உடைத்து 290 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் காமநாயக்கன்பாளையம் நகை கடையில் கொள்ளையடித்தது போன்று நைட்டி அணிந்து இருந்தனர்.

3 பேர் கைது

இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லாலா புலா ரத்தோட் (49), அஜய் பகவான் நானாவத் (41), ஜானல் மதியா நானாவத் (41) ஆகிய 3 பேரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் காமநாயக்கன்பாளையத்தில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் 3 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் காமநாயக்கன்பாளையம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 800 கிராம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீஸ் காவல் முடிவடைந்ததால் கொள்ளையர்கள் 3 பேரையும் பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவு

மேலும் நைட்டி அணிந்து நகைக்கடை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய தலை மறைவு ஆசாமி ராம்தாஸ் குலாப் சிங் ரத்தோட் என்பவனை காமநாயக்கன்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story