ராமநாதபுரத்தில் திருட்டு போன ரூ.4 லட்சம் போலீசாரை தேடி வந்தது


ராமநாதபுரத்தில் திருட்டு போன   ரூ.4 லட்சம் போலீசாரை தேடி வந்தது
x

ராமநாதபுரத்தில் திருட்டு போன ரூ.4 லட்சம் போலீசாரை தேடிவந்தது. அந்த பணத்தை ஒப்படைத்துவிட்டு, சென்னை ஆட்டோ டிரைவர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் திருட்டு போன ரூ.4 லட்சம் போலீசாரை தேடிவந்தது. அந்த பணத்தை ஒப்படைத்துவிட்டு, சென்னை ஆட்டோ டிரைவர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் திருட்டு

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 61). ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் தனது நண்பரிடம் வாங்கிய கடன் தொகையை செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மாயமானது. இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் பல இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வங்கியில் இருந்து சுப்பிரமணியத்தை 3 பேர் பின் தொடர்ந்து வந்ததும், அவர்கள்தான் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் ராமநாதபுரம் வந்து போலீசாரிடம் ரூ.4 லட்சத்தை ஒப்படைத்துள்ளார். அவரிடம் விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

ஆட்ேடா டிரைவர்

43 வயது நபர் சென்னை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் அவரின் மனைவி வழி உறவினர்களான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 3 பேர் அடிக்கடி வந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்களாம்.

இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்து ஆட்டோவில் செல்ல வேண்டும் என்று அழைத்தார்களாம். அவர் ஆட்டோவை பழுதுபார்க்க விட்டிருப்பதாக தெரிவித்ததால், அவரையும் அழைத்துக்கொண்டு அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் ராமநாதபுரம் வந்தனர். அங்கு ஆட்டோ டிரைவரை ஒரு இடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு, ஒரு வங்கி அருகே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வங்கியில் இருந்து வெளியே வந்த பாலசுப்பிரமணியனை நோட்டமிட்டு, அவரிடம் ரூ.4½ லட்சத்தை திருடியுள்ளனர்.

அதிர்ச்சி

பின்னர் 3 பேரும், அந்த ஆட்ேடா டிரைவரை மீண்டும் சந்தித்து ஒரு பையை கொடுத்து அதில் முக்கிய நில ஆவணங்கள் உள்ளன, பத்திரமாக வீட்டில் வைத்து கொள்ளும்படி கூறி சென்னைக்கு திரும்பி சென்று அவரை வீட்டில் விட்டுள்ளனர்.

இதற்கிடையே பாலசுப்பிரமணியத்திடம் பணம் திருடப்பட்ட சம்பவம் வெளியானது. இதை அறிந்த அந்த ஆட்டோ டிரைவர் சந்தேகம் அடைந்து, அந்த பையை திறந்து பார்த்துள்ளார். அதில் ரூ.4 லட்சம் இருந்ததால் அந்த பணத்தினை கொண்டு வந்து ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட 3 நபர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் (50), அசோக் (55), கிஷோர் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்ட போலீசார், ஆட்டோ டிரைவரிடம் விவரங்களை கேட்டு எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் நெல்லூரை சேர்ந்த 3 பேரையும் தேடிவருகின்றனர்.


Next Story