ஈரோட்டில் பரபரப்பு; போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 7½ பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 7½ பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார்.
கடந்த 7-ந் தேதி காலையில் சிவகுமாரின் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றுவிட்டனர். அதன்பிறகு அவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியூருக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
7½ பவுன் நகை
வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 7½ பவுன் நகையும், ரூ.25 ஆயிரமும் திருட்டுபோய் இருந்தது. வீட்டின் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் உள்ள நகை-பணத்தை திருடி சென்று உள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்மநபர்கள் பணம்-நகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.