பெருந்துறையில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: வீடு புகுந்து கத்தி முனையில் தாய்-மகளிடம் நகை பறிப்பு; முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்


பெருந்துறையில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: வீடு புகுந்து கத்தி முனையில் தாய்-மகளிடம் நகை பறிப்பு; முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
x

பெருந்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் தாய், மகளிடம் நகையை பறித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக முகமூடி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் தாய், மகளிடம் நகையை பறித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக முகமூடி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீடு புகுந்து..

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிக்கோவில் பிரிவு அருகே உள்ள தாய் நகரில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 63). அவருடைய மனைவி கமலா (56). இவர்களது மகள் கவுதமி (31). இவருக்கு திருமணமாகி தாரிகா (9) என்கிற மகள் உள்ளார். கவுதமி பெருந்துறை பகுதியில் தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெருந்துறையில் உள்ள தாய் வீட்டுக்கு கவுதமி மகளுடன் வந்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கந்தசாமி வீட்டுக்கு வெளியே அமர்ந்து இருந்தார். மற்றவர்கள் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டு நுழைவுவாயில் அருகே வந்து நின்றார். பின்னர் அந்த நபர் கந்தசாமியிடம் நான் போலீஸ்காரர், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டே பூட்டாமல் இருந்த கேட்டை வேகமாக திறந்து கொண்டு வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட கந்தசாமி அந்த நபரை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை.

அதிர்ச்சி

அதற்குள் அந்த வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் மீது ஏறிய மேலும் 2 பேர் சுவரை தாண்டி வீட்டு வாசல் பகுதிக்குள் குதித்தனர். இந்த 2 பேரும் முகமூடி அணிந்து இருந்தனர். 3 பேருக்கும் சுமார் 30 முதல் 35 வயது இருக்கும். அவர்கள் 3 பேரும் முதலில் கந்தசாமியை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர். அதன்பின்னர் அங்கிருந்த ஓர் அறைக்குள் அவரை தள்ளிவிட்டு, அந்த அறையை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டனர்.

இதைப்பார்த்த அங்கிருந்த கமலா மற்றும் கவுதமி, தாரிகா ஆகிய 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். பயத்தில் "திருடன் திருடன்" என்று கூச்சலிட்டார்கள். உடனே கொள்ளையர்கள் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை வெளியே எடுத்தனர். திடீரென கொள்ளையர்களில் ஒருவன் ஓடி வந்து தாரிகாவின் கழுத்தில் கத்தியை வைத்தான். மற்ெறாருவன் அவளது தாயார் கவுதமியின் கழுத்தில் கத்தியை வைத்தான். சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து விடுவோம் என்று கொள்ளையர்கள் மிரட்டினர்.

நகை பறிப்பு

இதைப்பார்த்து மிரண்டு போன கவுதமியின் தாயார் கமலா, எங்களை ஏதும் செய்துவிடாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொள்ளையர்களிடம் கெஞ்சியுள்ளார். பின்னர் அவர்கள் கவுதமியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிக்கொடியையும், தாரிகா காதில் தொங்கிக்கொண்டிருந்த தங்கத் தோட்டையும் கழற்றினர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள் என்று பயந்து அங்கிருந்த 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டனர்.

அதன்பின்னர் கொள்ளையர்களில் ஒருவன் சமையல் அறைக்குள் புகுந்து அங்கிருந்த சொம்பில் குடிநீரை பிடித்துக்கொண்டு வந்து கமலாவிடம் சொம்பை நீட்டி அதிலுள்ள தண்ணீரை குடிக்கும்படி கூறியுள்ளான். அதற்கு தாய் கமலாவிடம் கவுதமி, அதை குடித்துவிடாதீர்கள். இவன் அதில் விஷத்தை கலந்து இருப்பான் என்று கூறினார்.

தப்பித்து சென்றனர்

அதைக்கேட்ட கொள்ளையன், எனக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால், சமையல் அறைக்குள்ளிருந்து குடிப்பதற்கு தண்ணீரை பிடித்து வந்தேன். அது நல்ல தண்ணீரா? வேறு ஏதாவது தண்ணீரா என்பதை அறிந்து கொள்ளவே, உனது தாயாரை குடிக்கச் சொன்னேன் என்று கூறினான். இதைக்கேட்ட கமலா, உடனடியாக அந்த தண்ணீரை வாங்கி குடித்தார். அதன்பின்னரே அந்த கொள்ளையன் அந்த தண்ணீரை குடித்துள்ளான்.

பின்னர் அவர்கள் 3 பேரையும், கந்தசாமியை அடைத்து வைத்துள்ள அறைக்குள் தள்ளி, அறையின் வெளிப்புற தாழ்ப்பாளை போட்டு விட்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

விசாரணை

கொள்ளையர்கள் சென்றதும் அறைக்குள் அடைக்கப்பட்டு கிடந்த 4 பேரும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் கந்தசாமியின் வீட்டு்க்குள் சென்று அறை கதவை திறந்து 4 பேரையும் மீட்டனர்.

இதுகுறித்து கந்தசாமி பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கந்தசாமியின் வீடு பெருந்துறையில் சேலம் - கோவை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் தான் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் அதேபகுதியை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். முகமூடி கொள்ளையர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கத்தி முனையில் சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story