வீடு புகுந்து 35 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளை
வீடு புகுந்து 35 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் அருகே உள்ள எம்.வி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மனைவி லதா. இவர்கள் மகன் அமுதன், மகள் அஜிதாவுடன் வசித்து வருகிறார்கள். செங்கல்சூளை நடத்தி வந்த பாஸ்கரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அமுதன் சிங்கம்புணரி பஸ் நிலையம் வணிக வளாகத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லதா மற்றும் அவரது மகள் இருவரும் வெளியூர் சென்று விட்டனர். அமுதன் வீட்டை பூட்டி சாவியை அருகில் இருந்த அரிசி சிப்பத்திற்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 35 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 லேப்டாப் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின்ேபரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் குகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக சிங்கம்புணரி பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த கொள்ளை நடந்த வீட்டின் அருகில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள ஆசிரியர் வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் நகை மற்றும் பணம் திருடு போனது குறிப்பிடத்தக்கது.
இதனை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், இரவில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.