ரிமோட் மூலம் எடை எந்திரத்தை இயக்கி மோசடி: வேர்க்கடலை கொள்முதல் செய்த 2 பேருக்கு தர்மஅடி-மூட்டைக்கு 10 கிலோ ஏமாற்றியது அம்பலம்
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே ரிமோட் மூலம் எடை எந்திரத்தை இயக்கி வேர்க்கடலை கொள்முதலில் மோசடி செய்த 2 பேருக்கு விவசாயிகள் தர்மஅடி கொடுத்தனர்.
வேர்க்கடலை கொள்முதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளன. மேட்டு நில விவசாய நிலங்கள் உள்ள இந்த கிராமங்களில் வேர்க்கடலை மற்றும் ராகி ஆகியவை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பயிரிடப்படும் வேர்க்கடலைகளை விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிட்டு வேர்க்கடலைகளை வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள குமார்த்தனப்பள்ளி கிராமத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஆறுமுகம் என்ற வியாபாரி கிராம மக்களிடம் வேர்க்கடலைகளை எடை போட்டு மூட்டை மூட்டையாக வாங்கி உள்ளார். இவருக்கு கோட்டையூர் என்ற கிராமத்தை சேர்ந்த உள்ளூர் பிரமுகர் நூரந்தப்பா என்பவர் புரோக்கராக இருந்துள்ளார்.
'பீப்' சத்தம்
ஆறுமுகம் மற்றும் நூரந்தப்பா தாங்கள் கொண்டு வந்த டிஜிட்டல் எந்திரத்தின் மூலம் வேர்க்கடலைகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி எடை போட்டு வந்தனர். அப்போது அவர்கள் எடையை குறைத்து காட்ட, ரிமோட் மூலம் சென்சார் வசதியுடன் கூடிய அந்த டிஜிட்டல் எடை எந்திரத்தை இயக்கி உள்ளனர். இதன் மூலம் விவசாயிகளிடம் எடையை குறைத்து காட்டி மோசடி செய்தனர்.
ஒவ்வொரு முறையும் எடை போடும்போது 'பீப் பீப்' என்ற சத்தம் வந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சந்தேகம் அடைந்தனர். மேலும் ஆறுமுகம் மற்றும் நூரந்தப்பாவிடம் விசாரித்தனர். அப்போது தான் விவசாயிகள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
தர்மஅடி
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆறுமுகம் மற்றும் நூரந்தப்பாவை தாக்கினர். மேலும் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விவசாயிகளிடம் இருந்து ஆறுமுகம், நூரந்தப்பாவை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் எடை போடும் எந்திரம் மூலம் மோசடி செய்து, ஒரு மூட்டைக்கு 10 கிலோ வீதம் குறைத்து காட்டியது தெரியவந்தது. மேலும் எடையை குறைத்து காட்டி 500 மூட்டை வேர்க்கடலை கொள்முதல் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதமாக அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளான உரிகம், கோட்டையூர், மல்லள்ளி, மட்டியூர், தாண்டியம், நாயக்கனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.