தளி அருகே பன்றிகளை திருடி சென்ற மர்ம நபர்கள்-கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் விசாரணை


தளி அருகே பன்றிகளை திருடி சென்ற மர்ம நபர்கள்-கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே பன்றிகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பன்றிகள் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்ட தளி அருகே கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட ஜிகனி, ஹப்பகோடி, அத்திப்பள்ளி, சர்ஜாபூர் ஆகிய பகுதிகள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன.

ஜிகனியை அடுத்த மடப்பட்டணாவில் மஞ்சுநாத்-லட்சுமம்மா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் பட்டி அமைத்து ஏராளமான பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று பன்றிகளுக்கு உணவளிக்க மஞ்சுநாத் சென்றார். அப்போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 40 பன்றிகளையும் காணவில்லை.

கண்காணிப்பு கேமரா பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைபார்வையிட்டார். அதில் துண்டால் முகத்தை மூடியபடி மர்ம நபர்கள் சிலர், பன்றிகளை திருடி செல்வதும், சாலையில் அவற்றை ஓட்டி செல்வதும் பதிவாகிஇருந்தது.

இதேபோல் இந்தலவாடி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளும், ஹப்பகோடியை அடுத்த ஆவலஅள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவருக்கு சொந்தமான 3 மாடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவமும் கண்காணிப்பு கேமராக்களில்பதிவாகி உள்ளன.

போலீசார் விசாரணை

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கால்நடை வளர்ப்போர் போலீசில் அளித்து திருட்டு குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கால்நடைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கால்நடைகள் திருடப்படுவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story