கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் வட மாநில கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
3 மாநில எல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில எல்லையை கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
குறிப்பாக ஓசூர் பகுதியில் வட மாநிலத்தவர் அதிகமாக உள்ளனர். கிருஷ்ணகிரி, பர்கூர் உட்கோட்டங்கள் அமைதியாக இருந்தாலும், ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டங்களில் அவ்வப்போது கொலைகள், கடத்தல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக இந்த மாவட்டத்தில் அவ்வப்போது வட மாநில கொள்ளையர்களால் பெரிய அளவில் கொள்ளைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வங்கி கொள்ளை
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி குந்தாரப்பள்ளி அருகே ராமாபுரத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் இரவு துளை போட்டு புகுந்த கும்பல், வங்கி லாக்கரை வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து 6 ஆயிரம் பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதன் அன்றைய மதிப்பு ரூ.12 கோடி ஆகும்.
அதில் சில குற்றவாளிகள் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கைது செய்யப்பட்ட போதிலும், முக்கிய குற்றவாளிகள் தப்பினார்கள். பாதி அளவு கூட நகைகள் மீட்கப்படவில்லை. குருபரப்பள்ளி போலீசாரால் விசாரணை செய்யப்பட்ட அந்த வழக்கு அப்படியே நிலுவையில் உள்ளது.
ரூ.15 கோடி செல்போன்
அதேபோல 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி சூளகிரி அருகே அலகுபாவி என்னும் இடத்தில் கன்டெய்னர் லாரியை வழிமறித்து, டிரைவரை தாக்கி கட்டி போட்டு ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை வட மாநில கொள்ளை கும்பல் கடத்தி சென்றது.
அதில் தொடர்புடைய மத்திய பிரதேச கொள்ளையர்களை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடித்தாலும், சில குற்றவாளிகள் தப்பி சென்று விட்டனர். அதேபோல செல்போன்களும் முழுமையாக மீட்கப்படவில்லை.
துப்பாக்கி முனையில் கொள்ளை
இந்த 2 கொள்ளை வழக்குகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருந்த போதிலும் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பெரிய கொள்ளையில் வட மாநில கும்பல் கூண்டோடு பிடிபட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கிகளுடன் வட மாநில கொள்ளை கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஊழியர்களை கட்டி போட்டு ரூ.15 கோடி நகைகளை கொள்ளையடித்தனர்.
அந்த கொள்ளை கும்பலை, நகைகளில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி மூலமாக கண்காணித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தெலுங்கானா மாநிலத்தில் சுற்றி வளைத்து 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 89 குண்டுகள், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான நகைகளும் மீட்கப்பட்டன. மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பெரிய கொள்ளையாக குந்தாரப்பள்ளி வங்கி கொள்ளையும், சூளகிரி செல்போன் லாரி கடத்தல் வழக்கும் உள்ளன.
முற்றுப்புள்ளி
இதைத் தவிர கடந்த 2014-ம் ஆண்டு காப்பர் பிளேட்டுகள் ஏற்றி சென்ற லாரியை சூளகிரி அருகே கடத்திய ஆந்திர கும்பல், 2 டிரைவர்களை கொலை செய்தது. அவர்களை கிருஷ்ணகிரி போலீசார் பிடித்தனர். இந்த 4 கொள்ளை வழக்குகள் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரிய குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும் வட மாநில கொள்ளையர்களின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு காவல்துறை தகுந்த நடவடிகை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.