ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை திருட்டு


ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற அதிகாரி

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வெலகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 66). ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி. இவர் கடந்த 6-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார்.

சம்பவத்தன்று காலை பண்னீர்செல்வம் வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பன்னீர்செல்வத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், மனைவியுடன் வீட்டுக்கு வந்தார்.

விசாரணை

பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த தங்க நகை, தங்கச்சங்கிலி, வளையல், தோடு உள்ளிட்ட 51 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

இதுகுறித்து பன்னீர்செல்வம் மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

வலைவீச்சு

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story