சத்தியமங்கலத்தில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து32 பவுன் நகை- பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு


சத்தியமங்கலத்தில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து32 பவுன் நகை- பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு  வலைவீச்சு
x

சத்தியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்

சத்தியமங்கலம் கோவை ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.டி. கார்னரில் குடியிருந்து வருபவர் சுரேஷ் (வயது38). இவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் டெக்னீசியன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யா.

இந்த நிலையில் சுரேஷ் குடும்பத்துடன் நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அதன்பின்னர் அங்கு பூஜைகளை முடித்துவிட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் சத்தியமங்கலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

நகை-பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் சுரேஷ் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவும் திறந்திருந்தது. அதிலுள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சுரேஷ் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பீரோைவ திறந்து அதில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடியே ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் தலைமையில் 3 குழுக்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story