கோபி அருகே துணிகரம்: வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடி கொள்ளை- பூட்டை உடைத்து அள்ளி சென்ற மர்ம நபர்கள்


கோபி அருகே வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடியை வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த துணிகர சம்பவம் நடந்து உள்ளது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடியை வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த துணிகர சம்பவம் நடந்து உள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர்

ஈரோடு மாவட்டம் கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்தவர் முரளிராம். இவருடைய மகன் சுதர்சன் (வயது 27). திருமணம் ஆகவில்லை. ரியல் எஸ்டேட் அதிபர்.

இதேபோல் கோபி பாரதி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சுகந்தி (50). கணவர் இறந்த பிறகு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள தன்னுடைய மகன் வீட்டுக்கு சுகந்தி சென்றுவிட்டார். இதனால் கோபியில் உள்ள அவரது வீடு பூட்டி கிடந்தது.

ரூ.15 லட்சம் முன் பணம்

இந்த நிலையில் கோபியில் உள்ள தனது வீட்டை விற்க சுகந்தி விரும்பினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுகந்தியை சுதர்சன் அணுகி உள்ளார். பின்னர் அந்த வீட்டை தான் வாங்குவதாக சுகந்தியிடம் கூறினார். இதையடுத்து ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கு சுகந்தியின் வீடு விலை பேசப்பட்டது. இதற்கு முன்பணமாக (அட்வான்ஸ்) ரூ.15 லட்சத்தை சுகந்தியிடம் சுதர்சன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு வழங்கியதாக கூறப்படுகிறது. மீதம் உள்ள தொைகயை 3 மாதத்துக்குள் கொடுத்து வீட்டை கிரயம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து வீட்டின் சாவியை சுதர்சனிடம் சுகந்தி வழங்கி உள்ளார். சாவி கிடைத்தாலும் அந்த வீட்டை தன்னுடைய முழு பயன்பாட்டுக்கு சுதர்சன் கொண்டு வரவில்லை. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார்.

படுக்கை அறையில்...

இந்த நிலையில் சுகந்தியின் வீட்டை வாங்குவதற்காக சேமித்த பணம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் கிடைத்த பணம் என ெமாத்தம் ரூ.2 கோடியே 80 லட்சத்தை சுகந்தியின் வீட்டில் உள்ள ஒரு படுக்கை அறை ஒன்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுதர்சன் வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்காக படுக்கை அறையில் உள்ள மரத்தால் செய்யப்பட்ட அலமாரியில் 4 டிராலி பேக்குகளில் அடுக்கி பாதுகாப்பாக வைத்ததுடன், அந்த அலமாறியை பூட்டி வைத்து விட்டார். பணம் இருந்ததால் அடிக்கடி சுதர்சன் வீட்டிற்கு வந்து சென்று உள்ளார்.

ரூ.2¾ கோடி கொள்ளை

நேற்று மதியம் வீட்டுக்கு சுதர்சன் வந்து உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பதற்றத்துடன் வீட்டின் பணம் வைக்கப்பட்டிருந்த படுக்கை அறைக்கு ஓடிச்சென்றார்.

அப்போது அந்த படுக்கை அறையின் கதவும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டதும் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. மேலும் அந்த அறையில் உள்ள அலமாரி திறந்து கிடந்ததுடன், அதில் பணத்துடன் வைக்கப்பட்டிருந்த 4 டிராலி பேக்குகளும் இல்லாததை கண்டதும் அவர் திடுக்கிட்டார்.

பரபரப்பு

உடனே அவர் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் தெரிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவான ரேகைகளை சேகரித்தனர். அதுமட்டுமின்றி ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீரா சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 கோடியே 80 லட்சத்தை மர்ம நபர்கள் அள்ளி சென்ற சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story