ஈரோட்டில் துணிகரம்; நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு- கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் கைவரிசை
ஈரோட்டில் நிலஅளவையாளர் வீட்டில் கதவை திறந்து வைத்து குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோதே 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஈரோட்டில் நிலஅளவையாளர் வீட்டில் கதவை திறந்து வைத்து குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோதே 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
நில அளவையாளர்
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் 3-வது பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (வயது 60). டிரைவர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் கவின்ராஜ் ஈரோட்டுக்கு வந்திருந்தார். தமிழரசு குடும்பத்துடன் முதல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழரசு, கவின்ராஜ், அபிராமி ஆகியோர் வீட்டுக்குள் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வெப்பம் அதிகமாக இருந்ததால் சுமதி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூங்க சென்றார். மேலும் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் மூடி வைத்துவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலையில் அவர் இறங்கி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்ததுடன், அதில் இருந்த துணிகளும் சிதறி கிடந்தன. இதைப்பார்த்ததும் தமிழரசு மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
11 பவுன் நகை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
வீட்டின் மெயின் கேட் பூட்டப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் வைத்திருந்த சாவியை பயன்படுத்தி பூட்டை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்ததால், வீட்டுக்குள் நைசாக நுழைந்து உள்ளனர். அங்கு இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தையும், வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் திருடிச்சென்றது தெரியவந்தது. அங்கு மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்றது. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் வீட்டுக்குள் ஆட்கள் தூங்கி கொண்டு இருந்தபோதே மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.