பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ்- 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ்- 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

பவானி

பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.7 லட்சம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 60). இவர் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி பழனியம்மாள் (58). இவர்களுடைய மருமகள் திருப்பூரில் வீடுகட்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு கொடுப்பதற்காக ரூ.7 லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு குமாரும், பழனியம்மாளும் நேற்று முன்தினம் காலை மேட்டூரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.

தாங்கள் கொண்டு சென்ற பணப்பையை மற்றொரு பையின் மேல் வைத்து குமார் கால்களுக்கு கீழே வைத்திருந்தார்.

குழந்தையுடன் ஏறிய பெண்கள்

இந்தநிலையில் பஸ் பவானி பஸ் நிலையம் வந்ததும் சிலர் ஏறினார்கள். அதில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என 2 பேர் ஏறி குமார் அமர்ந்திருந்த இருக்கை அருகே வந்து நின்றனர். அதில் ஒரு பெண்ணின் கையில் குழந்தை இருந்தது.

அப்போது உடன் இருந்த மற்றொரு பெண் தனக்கு மயக்கம் வருவதுபோல் உள்ளது என்று கூறி பழனியம்மாளின் அருகே கீழே உட்கார்ந்தார். குழந்தையை வைத்திருந்த பெண், குமாரிடம் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி கொடுத்தார். குமாரும் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டார்.

பணம் அபேஸ்

சிறிது நேரம் 2 பெண்களும் குமாரிடமும், பழனியம்மாளிடமும் பேச்சு கொடுத்தபடியே வந்தனர். பவானி லட்சுமி நகர் நிறுத்தம் வந்ததும் பஸ் நின்றது. அப்போது 2 பெண்களும் குழந்தையை வாங்கிக்கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். அப்போது அவர்களுடன் குமாரின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து இறங்கினார்.

அப்போது குமாரும், பழனியம்மாளும் பஸ்சை விட்டு இறங்கி பெருமாநல்லூர் செல்வதற்காக கோவை பஸ்சில் ஏறினார்கள். அப்போதுதான் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பணப்பை இல்லாததை கண்டு திடுக்கிட்டார்கள். தங்களுடன் பேச்சு கொடுத்தபடியே வந்த பெண்கள்தான் கவனத்தை திசை திருப்பி பணத்தை எடுத்து சென்று விட்டார்கள். என்று புரிந்து கொண்டார்கள்.

வலைவீச்சு

பெண்கள் இறங்கி சென்ற பகுதியில் குமாரும், பழனியம்மாளும் தேடிப்பார்த்தார்கள். அவர்கள் கண்ணுக்கு சிக்கவில்லை. உடனே சித்தோடு போலீசில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் துரிதமான விசாரணையை தொடங்கினார்கள்.

அப்போது 3 பெண்களும் பவானியில் இருந்து வாடகை கார் மூலம் சேலம் சென்று பெங்களூரு பஸ்சில் ஏறியது தெரிந்தது. உடனே அந்த வழியாக செல்லும் பஸ்களில் சோதனை செய்யுமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் 3 பெண்களும் சிக்கவில்லை. அவர்கள் பெங்களூருதான் சென்றனரா? அல்லது இடையில் இறங்கி வேறு இடத்துக்கு தப்பி சென்றுவிட்டனரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சத்தை 3 பெண்கள் அபேஸ் செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story