ஈரோட்டில் வீடு புகுந்து 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
ஈரோட்டில், வீடு புகுந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில், வீடு புகுந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை-பணம் திருட்டு
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 3-யை சேர்ந்தவர் தமிழரசு (வயது 60). பால் வியாபாரி. இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தமிழரசுவின் மனைவி சுமதி, வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த மாதம் 30-ந்தேதி இரவு வீட்டின் கதவினை திறந்து வைத்து விட்டு, மாடிக்கு தூங்க சென்றார்.
வீட்டுக்குள் தமிழரசு மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த மர்மநபர் வீடு திறந்து கிடந்ததை பார்த்து நள்ளிரவில் தமிழரசுவின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து அந்த நபர் தப்பி சென்றார்.
வாலிபர் கைது
இதுகுறித்து தமிழரசு ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுற்றிதிரிந்த சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர், ஈரோடு மாவட்டம் கோபி அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்த நவீன் என்கிற நவீன்குமார் (வயது 28) என்பதும், தமிழரசு வீட்டில் நள்ளிரவு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் மீட்கப்பட்டது.