டி.என்.பாளையம் அருகே துணிகரம் விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சம் கொள்ளை-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
டி.என்.பாளையம் அருகே விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.7¼ லட்சம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பசுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 52). விவசாயி. இவர் புதிதாக கடை ஒன்றை கட்டி உள்ளார். அதன் திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை சத்தியமங்கலத்தில் உள்ள தனது பெரியப்பா மகன் தங்கவேல் என்பவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு அதனை தனது காரின் இடது பக்கமாக முன் இருக்கைக்கு அடியில் துணிப்பையில் வைத்திருந்தார். பின்னர் பணத்துடன் காரில் அங்கிருந்து பசுவபாளையம் சென்று கொண்டிருந்தார்.
கொள்ளை
சத்தியமங்கலம்-அத்தாணி ரோட்டில் ஓட்டு்க்கடை மேடு அருகே சென்றபோது அங்குள்ள தனது தோட்டத்தின் முன்பு காரை நிறுத்தியுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி தோட்டத்துக்குள் சென்று சுற்றி பார்த்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி காருக்கு வந்தார். அப்போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே அதன் சிதறல்கள் கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்து இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த துணிப்பையை பார்த்தார். அப்போது பை இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.
கார் கண்ணாடியை உடைத்து மர்மநபர் ஒருவர் ரூ.7¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனே இது குறித்து ரமேஷ்குமார் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பணம் கொள்ளையடிக்கப்பட்ட காரை பார்வையிட்டனர்.
வலைவீச்சு
சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு்ள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ரமேஷ்குமார் காரில் பணம் கொண்டு சென்றதை நன்கு தெரிந்த மர்ம நபர் தான் அவரை பின் தொடர்ந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
டி.என்.பாளையம் அருகே கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ.7¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.