தர்மபுரியில் செருப்பு கடை சுவரில் துளையிட்டு பணம் திருடியவர் கைது
தர்மபுரி:
தர்மபுரியில் செருப்பு கடை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து பணம் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கடையில் திருட்டு
தர்மபுரி டேக்கீஸ்பேட்டையை சேர்ந்தவர் அபு (வயது 48). இவர் திருப்பத்தூர் சாலையில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வியாபாரத்தை முடித்த பின் அபு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை மீண்டும் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பின்பக்க பகுதியில் உள்ள சுவரில் ஆள் நுழையும் அளவிற்கு துளையிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபு கடையில் ஏதேனும் பொருட்கள் திருட்டு போயிருக்கிறதா? என்று சரி பார்த்தார். அப்போது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மாயமாகி இருந்தது. நள்ளிரவில் கடையின் பின் பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
கைது
இது குறித்து அபு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த திருட்டில் ஈடுபட்டது தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்த அபீப் (56) என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அபீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு வேறு திருட்டுகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.