கெங்கையம்மன் கோவிலில் திருட்டு


கெங்கையம்மன் கோவிலில் திருட்டு
x

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் நகை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர்

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் நகை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கெங்கையம்மன் கோவில்

வேலூர் சத்துவாச்சாரியில் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் சிரசு திருவிழா நடைபெற்றது. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் செல்லும் கதவின் பூட்டை உடைத்து உள்ளனர்.

பின்னா் அம்மன் சன்னதியில் உள்ள கிரீல் கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி, 2 தங்க பொட்டு உள்பட 3 பவுன் நகைகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பட்டு சேலைகள், வெள்ளி குடை, ஒரு வெள்ளி கிரீடம், வெள்ளி மாலை, வெள்ளி சந்தன கிண்ணம், வெள்ளி தட்டு ஆகியவற்றை திருடிச் சென்றனர்.மொத்தம் 3 கிலோ வெள்ளி பொருட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ரொக்கப்பணமும் திருடப்பட்டு உள்ளது.

கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு செய்யக்கூடிய கம்ப்யூட்டர் 'ஹார்ட் டிஸ்'கையும் மா்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

கோவிலில் அம்மன் சன்னதியில் சிரசு உள்ளது. இந்த சிரசின் மேல் வெள்ளி கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது. மர்ம நபா்கள் வெள்ளி கிரீடத்தினை விட்டு விட்டு சென்றுவிட்டனர். கோவிலுக்கு வந்த ஊழியர்கள் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து சென்றதால் அவர்கள் ஏற்கனவே இந்த பகுதியில் அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

எப்போதும் ஆள்நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இருக்கும் இடத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story