மோட்டார் சைக்கிள் திருட்டு; 3 பேர் கைது
பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை அடுத்த வேட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது23). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (23) இவர்கள் 2 பேரும், கடந்த 2020-ம் ஆண்டு, மோட்டார் சைக்கிளில் ஆற்று மணல் எடுத்து வந்த போது போலீசார், பிடித்து, வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த மோட்டார் சைக்கிளை பந்தநல்லூர் போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் திருடி சென்றனர்.
3 பேர் கைது
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சர்மிளா, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது வேட்டமங்கலத்தை சேர்ந்த சூர்யா, அருண்குமார், செல்வமணி (27), விக்ரம் (22) ஆகிய 4 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், செல்வமணி, சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய விக்ரமை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.