முதியவரை பராமரிப்பதாக கூறி 10 பவுன் நகை-பணம் திருட்டு
முதியவரை பராமரிப்பதாக கூறி 10 பவுன் நகை-பணம் திருட்டு
தஞ்சையில் முதியவரை பராமரிப்பதாக கூறி 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளம்பரம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 80). இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டுவேலை மற்றும் முதியவர்கள் பராமரிப்பது தொடர்பான விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். உடனே அவர் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் பேசிய பெண் ஒருவர் தன்னை திருப்பூர், கோபி மெயின் சாலை அன்பு நகரை சேர்ந்த சரஸ்வதி (58) என்று அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் தன்னுடைய உறவினரான நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கன்னி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் (58) அவருடன் பராமரிப்பு வேலைகளை செய்து வருவதாக கூறியுள்ளார்.
நகை-பணம் திருட்டு
இதையடுத்து தஞ்சைக்கு வந்த சரஸ்வதி மற்றும் ராஜன் ஆகிய 2 பேரும் முதியவர் வீட்டில் 1 மாதம் தங்கியுள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணியன் இரவில் தூங்க சென்று விட்டார். அப்போது சரஸ்வதி மற்றும் ராஜன் ஆகிய 2 பேரும் வீட்டின் அறையில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 ஆயிரத்தை எடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
காலையில் எழுந்த சுப்பிரமணியன் இருவரையும் தேடியுள்ளார். அப்போது அவர்கள் இல்லாதது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை அவர்கள் திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியன் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி, ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.