4 வீடுகளில் 47 பவுன் நகை-பணம் திருட்டு


4 வீடுகளில் 47 பவுன் நகை-பணம் திருட்டு
x

சிறுகனூர் அருகே அடுத்தடுத்த 4 வீடுகளில் 47 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

சமயபுரம், ஜூன்.14-

சிறுகனூர் அருகே அடுத்தடுத்த 4 வீடுகளில் 47 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பணம் திருட்டு

சிறுகனூர் அருகே உள்ள ஸ்ரீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 72). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஆடுமேய்க்க தோட்டத்திற்குச் சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.43 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.

நகைகள் திருட்டு

இதேபோல், அதே ஊரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீட்டை பூட்டிவிட்டு செட்டிகுளத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 26 பவுன் நகை திருடு போயிருந்தது.

இதேபோல் சிறுகனூர் அருகே உள்ள எதுமலை ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி (65). இவர் சம்பவத்தன்று காலை பெரம்பலூர் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் அச்சம்

இதேபோல், எதுமலை முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்துல் சமது (65) என்பவர் வீட்டில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை, 3 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து 4 பேரும் தனித்தனியாக சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story