வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
கீரனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து...
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி கல்யாணி (வயது 55). இவர்களது மகன் மணி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணியை பார்ப்பதற்காக நேற்று வீட்டை பூட்டிவிட்டு இவர்கள் சென்றுள்ளனர். பின்னர் இன்று மதியம் மணியை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
5 பவுன் நகை திருட்டு
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் கொண்ட 10 மோதிரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கல்யாணி கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.