நூதன முறையில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
தச்சம்பட்டு அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணாபுரம்
தச்சம்பட்டு அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5 பவுன் நகை
தச்சம்பட்டு அருகே உள்ள பெரியகல்லப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 69). இவருக்கு காமராஜ், சசிகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தற்போது சசிகுமாருடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சாந்தா தனது வீட்டின் வாசலில் மிளகாய் காய வைத்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் சாந்தாவிடம் நீங்கள் அணிந்துள்ள நகையின் மாடல் நன்றாக உள்ளது என்றும் அதனை கழட்டித் தாருங்கள் பார்த்துவிட்டு தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சாந்தா அந்த நபரிடம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கழட்டி கொடுத்தார்.
பின்னர் அந்த நபர் தாகமாக உள்ளது, தண்ணீர் எடுத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வெளியே வந்து பார்த்தபோது அந்த நபரை காணவில்லை.
இதனால் கூச்சலிட்ட சாந்தா அக்கம்பக்கத்தினரிடம் தான் அணிந்திருந்த சங்கிலியை பார்த்து தருகிறேன் என்று கூறிவிட்டு இங்கு நின்றவர் காணவில்லை என்று கூறினார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் அந்த நபரை தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் சாந்தா புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.