(செய்திசிதறல்) வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்-ரூ.20 ஆயிரம் திருட்டு


(செய்திசிதறல்) வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்-ரூ.20 ஆயிரம் திருட்டு
x

சமயபுரம் அருேக வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.20 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

சமயபுரம் அருேக வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.20 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சந்துரு (வயது 34). இவர் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லால்குடி அருகே உள்ள மலையப்ப நகரை சேர்ந்த தனது அக்காள் கணவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக சந்துரு வீ்ட்டை பூட்டிவிட்டு தாயாருடன் சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள்இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செல்போன் திருட்டு

*மணிகண்டம் தீனதயாளன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவர் திருச்சி பைபாஸ் சாலையில் செட்டிப்பட்டி பகுதியில் கோரையாறு பாலம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது விஜயகுமார் தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஏர்போர்ட் காமராஜ்நகர் பாண்டியன்தெருவை சேர்ந்த தனுஷ் (19), திருச்சி எம்.ஐ.டி. அய்யம்பட்டியை சேர்ந்த புகழரசன் (19), கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் அதனை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ், புகழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்து, செல்போனை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஸ்வரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

பணம் பறிப்பு

*திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (59). சம்பவத்தன்று தேரடிவீதியில் நின்று கொண்டிருந்த இவருடைய சகோதரரை ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோட்டை போலீசார், இதுதொடர்பாக அல்லிமால் தெருவை சேர்ந்த சங்கர் (47) என்பவரை கைது செய்தனர்.

கஞ்சாவிற்ற 2 பேர் கைது

*திருச்சி வரகனேரி, உறையூர் பகுதிகளில் கஞ்சா விற்றதாக யூனுஸ்(53), விக்னேஷ்வரன்(21) ஆகியோரை உறையூர் போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் யூனுசிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

முதியவர் சாவு

*மண்ணச்சநல்லூர் தாலுகா திருப்பைஞ்சீலி பகுதியை சேர்ந்தவர் சோழன் (80). இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடையன்பட்டி பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் உடையான்ப்பட்டி கட்டளை வாய்க்காலில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுவிற்ற 2 பேர் கைது

*திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக அதேபகுதி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பழனி என்கிற இளையமாறன் (52), ஆர்.சி.நகரைச் சேர்ந்த சின்னத்துரை (42) ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story