பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி திருட்டு
சோழகம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 பவுன் சங்கிலி திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சோழகம்பட்டியில் விநாயகர் கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் அப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மனைவி சின்னமணி என்பவர் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
வலைவீச்சு
இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்தவர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் மர்மநபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சின்ன மணி கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.