குளிர்சாதன எந்திரங்களில் செம்பு கம்பிகள் திருட்டு
திண்டுக்கல்லில், வங்கியில் பொருத்தியிருந்த குளிர்சாதன எந்திரங்களில் செம்பும் கம்பிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் நேருஜிநகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்படுகிறது. இந்த வங்கியில் 10 குளிர்சாதன எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வங்கியை திறந்ததும் ஊழியர்கள் சுவிட்சுகளை இயக்கிய போது, குளிர்சாதன எந்திரங்கள் மட்டும் செயல்படவில்லை. ஒரே நேரத்தில் அனைத்து எந்திரங்களும் செயல்படாததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே வங்கி கட்டிடத்துக்கு வெளியே பொருத்தி இருந்த குளிர்சாதன எந்திரங்களில் மற்றொரு பாகத்தை பார்த்தனர். அப்போது அந்த எந்திரங்களில் இருந்த செம்பு கம்பிகள் காணாமல் போயிருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நள்ளிரவில் மர்ம நபர்கள், குளிர்சாதன எந்திரங்களில் இருந்த செம்பு கம்பிகளை துண்டித்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வங்கியில் 10 குளிர்சாதன எந்திரங்களில் செம்பு கம்பிகளை துண்டித்து திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.