பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாக்கு தோட்டத்தில் மின் கம்பிகள் திருட்டு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாக்கு தோட்டத்தில் மின் கம்பிகள் திருட்டு போனது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 59). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் திருவனப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வெங்கடசமுத்திரத்தில் இவருக்கு சொந்தமான 6½ ஏக்கர் விவசாய நிலம் மற்றும் இவரது உறவினர் பெருமாள் என்பவரின் விவசாய நிலமும் உள்ளது. இதில் பாக்கு பயிரிட்டு பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் இவரது பாக்கு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளார். பிறகு மறுநாள் காலை தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, அங்குள்ள சுவிட்ச் போர்டில் இருந்து மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை (மின்வயர்) மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றுள்ளனர்.
இதேபோன்று பெருமாள் கிணற்றில் இருந்தும் மின்சார கம்பி திருடப்பட்டு உள்ளது. இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.