செராமிக் சூளையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
விருத்தாசலம் செராமிக் சூளையில்ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய மா்ம நபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒருங்கிணைந்த செராமிக்ஸ் சுயஉதவிக்குழு சங்கம் மூலம் சுடு சூளை உள்ளது. விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகள் அனைத்தும் இந்த சுடு சூளையில் சுடப்படும். கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த சுடு சூளை இயங்கவில்லை. இந்த சூளையில் பல லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை சூளை நிர்வாகிகள் சுடு சூளைக்கு வந்தனர். அப்போது சூளையில் இருந்த 5 மின் மோட்டார்கள், கண்காணிப்பு கேமராக்கள், மின்விசிறிகள், அச்சு வீல் ஒன்று உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
சூளை இயங்காததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் சூளைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.