ஈரோடு மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணில் தகவல் திருட்டு
ஈரோடு மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணில் தகவல் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணில் தகவல் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தகவல் திருட்டு
ஈரோடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி. இவருடைய வாட்ஸ்-அப் எண்ணை மர்ம நபர்கள் சமீபத்தில் ஹேக் (தகவல் திருட்டு) செய்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலரின் தொலைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர்.
அதில் தான் முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவும், அவசர உதவியாக தனியார் நிறுவன கிப்ட் கார்டு ஆன்லைனில் வாங்க வேண்டும் எனக்கூறி அதற்கான 'லிங்க்'கும் அனுப்பப்பட்டு உள்ளது. பெண்கள் உள்பட அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளனர்.
போலீசில் புகார்
மேலும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசியபோது இந்தியில் மர்மநபர் ஒருவர் பதில் அளித்துள்ளார். இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறும்போது, ` எனது செல்போன் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். ஏதேனும் பொய்யான தகவல் வந்தாலும் பொதுமக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்` என்றார்.