அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்
அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம் அருகே உள்ள நாச்சானந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் வாசுதேவன் (வயது 39) திருவண்ணாமலையில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய அவர் சாப்பிட்டதும் இரவு வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு மாடிக்கு சென்று குடும்பத்தினருடன் தூங்கினார். காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவை திறக்கப்பட்டு கிடந்ததோடு உள்ேள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை மற்றும் ஏழுமலை தனியாக மேசையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதே போன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தானம்மாள் (70), வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கியபோது மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.