பெட்டிக்கடையில் பணம் திருட்டு
கடையம் அருகே பெட்டிக்கடையில் பணம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
கடையம்:
கடையம் அருகே பாப்பான்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் சூச்சி. இவருடைய மனைவி செல்வி சூச்சி. வில்லு பாடும் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் பாப்பான்குளம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு செல்வி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது மர்மநபர்கள் பின்கதவை உடைத்து கடைக்குள் புகுந்து கடையில் இருந்த 450 ரூபாய் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெயின் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் உண்டியலையும் மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஏற்கனவே இக்கோவில் உண்டியலை கடந்த முறையும் உடைக்க முயற்சி செய்தும் மர்மநபர்களால் உடைக்க முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.