எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருட்டு
டியூப் லைட் வாங்குவது போல நடித்து எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
எலக்ட்ரிக்கல் கடை
கோபால்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவர், கோபால்பட்டி சந்தைரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ராஜாவின் உறவினர் ஆழ்வார் (60) கடையில் இருந்தார்.
அப்போது, டிப்-டாப்பாக பேண்ட் சட்டை அணிந்து 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தனர். அங்கிருந்த ஆழ்வாரிடம் டியூப் லைட் கேட்டனர். இதனையடுத்து அவர் ஒரு டியூப் லைட்டை கொடுத்தார்.
அதனை பார்த்த அவர்கள், மேலும் 7 டியூப் லைட்டுகள் தங்களுக்கு வேண்டும் என்றனர். இதனால் டியூப் லைட்டுகளை எடுப்பதற்காக ஆழ்வார் கடையின் மற்றொரு அறைக்கு சென்றார்.
பணம் திருட்டு
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மர்ம நபர்கள் 2 பேரும் கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே டியூப் லைட்டுகளை எடுத்து விட்டு ஆழ்வார் அங்கு வந்தார். டியூப் லைட்டுகள் கேட்ட வாலிபர்களை காணவில்லை.
இதனையடுத்து கல்லாவை பார்த்தபோது, அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் ராஜா, சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவங்களை அடிப்படையாக கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் கோபால்பட்டி, வேம்பார்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.