சேலம் அருகே ரூ.40 லட்சம் செல்போன் கோபுரத்தின் உதிரிபாகங்கள் திருட்டு


சேலம் அருகே ரூ.40 லட்சம் செல்போன் கோபுரத்தின் உதிரிபாகங்கள் திருட்டு
x

சேலம் அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுர உதிரிபாகங்கள் திருடியதாக நிலத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

செல்போன் கோபுரம்

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). இவர் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு கோபுரம் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். சேலம் அருகே உள்ள மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் என்பவரது நிலத்தில் கடந்த 2009-ம் ஆண்டு தனியார் செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது.

இதற்காக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் சுந்தரராஜன் வாடகையாக பெற்று வந்தார். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு அந்த தொகை வழங்கப்படவில்லை. இதனால் சுந்தரராஜன் தனது நிலத்தில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரத்தின் உதிரிபாகங்களை ஆட்கள் மூலம் அகற்றும் பணியை செய்து வந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தமிழரசன் சேலம் விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார்.

8 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து சுந்தரராஜனிடம் செல்போன் கோபுரத்தின் உதிரிபாகங்களை அகற்றுவது குறித்து அவர் கேட்டறிந்தார். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தமிழரசன் வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ரூ.40 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுர உதிரிபாகங்கள் திருட்டு போய் உள்ளதாக கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சுந்தரராஜன் மற்றும் அவருடைய மகன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story