சேலம் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் திருட்டு


சேலம் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் திருட்டு
x

சேலம் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1.20 லட்சத்தை மர்ம நபர்கள் 3 பேர் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

கார் பட்டறை

சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன். இவர், அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை வைத்துள்ளார். அங்கேயே நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலவன், பணியை முடித்துவிட்டு கார் பட்டறையை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கார் பட்டறைக்கு வந்த மர்ம நபர்கள் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நிதி நிறுவனத்திற்குள் புகுந்தபோது, பட்டறையின் அருகே வசித்து வரும் லாரி டிரைவர் வெங்கடேஷ் என்பவர் சத்தம் கேட்டு எழுந்தார்.

இதையடுத்து நிதி நிறுவனத்திற்குள் மர்ம நபர்கள் சென்றதை நோட்டமிட்ட அவர், உடனடியாக வேலவனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் நிலத்தின் உரிமையாளரான சண்முக சுந்தரத்துக்கு கூறினார். இதையடுத்து அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டவாறு அங்கு சென்றார்.

ரூ.1.20 லட்சம் திருட்டு

அப்போது நிதி நிறுவனத்திற்குள் இருந்து வெளியே வந்த 3 பேர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து நிதி நிறுவனத்தில் சோதனை செய்தபோது, அங்கிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில் பட்டறையில் மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை விட்டு சென்றதால் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story