பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி ரூ.19 ஆயிரம் திருட்டு
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி ரூ.19 ஆயிரம் திருடி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த மணிவண்ணன் மனைவி ரமணி (வயது42).இவர் நேற்று காலை தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஒரத்தநாடு பெரியார் சிலை அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டருக்கு சென்றார். அங்கு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தார். இதனை அருகில் இருந்து நோட்டமிட்ட ஒரு வாலிபர் பணத்தை தான் எடுத்துக் கொடுப்பதாக கூறி, ரமணியின் ஏ.டி.எம். கார்டை பெற்றார். பிறகு பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு, பணம் வரவில்லை எனக் கூறி ரமணியிடம் ஒரு போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம்.மையத்தில் இருந்து ரமணியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.19 ஆயிரத்தை திருடி உள்ளார். வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக ரமணியின் செல்போனுக்கு குறுச்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.19 ஆயிரம் திருடி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.