சங்ககிரி அருகே பனியன் கம்பெனி உரிமையாளரிடம் ரூ.46¾ லட்சம் திருட்டு
சங்ககிரி அருகே பனியன் கம்பெனி உரிமையாளரிடம் ரூ.46 லட்சத்து 96 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்ககிரி:
பனியன் கம்பெனி
திருப்பூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 28). இவர் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மேலும் ஜோதிமணி கடந்த 30 ஆண்டுகளாக திருப்பூரில் பனியன் கம்பெனி (கார்மெண்ட்ஸ்) நடத்தி வருகிறார். மேலும் விஜயகுமார், தனது தந்தை ஜோதிமணிக்கு உதவியாகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவர்களது கம்பெனியில் தயாரிக்கப்படும் டி-சர்ட்களை விஜயவாடா, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்கள். அதற்கான பணத்தை வாங்கி வர கடந்த 18-ந் தேதி திருப்பூரில் இருந்து ஜோதிமணி, விஜயகுமார் ஆகியோர் விஜயவாடா, ஐதராபாத் சென்றனர். அங்கு பணத்தை வசூலித்து விட்டு ஆம்னி பஸ்சில் திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர் வசூலித்த தொகையாக ரூ.46 லட்சத்து 92 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து கொண்டு பஸ்சில் வந்தனர்.
பணம் திருட்டு
சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஆம்னி பஸ் நின்றது. பணம் இருந்த பையை ஜோதிமணி, விஜயகுமார் ஆகியோர் பஸ்சின் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு பஸ்சில் இருந்து இறங்கி இயற்கை உபாதையை கழிக்க சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் இருந்த பையை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சங்ககிரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பஸ்சில் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.